உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து கருத்துக்கு ஆதரவு?

இதுதொடர்பாக மாநிலங்கள் இடையே ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம், என பஞ்சாப் கல்வி அமைச்சர் உபிந்தர்ஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யவும், 12ம் வகுப்பு தேர்வை நடத்த தேசிய அளவில் வாரியம் ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். இது தேசிய அளவிலான கொள்கை என்பதால், இதை அமல்படுத்த, தேசிய அளவில் ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, மாநிலங்கள் இடையே ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டும். மேற்கத்திய கல்வி முறையை அப்படியே அமல்படுத்தும் போது கவனம் அவசியம். இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதை விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம் என, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம், அமெரிக்க கல்வி முறையை இங்கு அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அது சரியல்ல. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, சமூகப் பொருளாதார நிலைமைகளில் பெருத்த வேறுபாடு உள்ளது. புதிய கல்வி முறையை அமல்படுத்தும் போது, ஆசிரியர்கள் பொறுப்புடமையோடு செயல்பட வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு அவசியம். அமெரிக்காவில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டம் மாறுபட்டதாக உள்ளது. இருப்பினும், மத்திய அமைச்சரின் யோசனைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார். கபில் சிபலின் அறிவிப்பு தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:நூறு நாட்களில் சாதனை படைக்கப் போகிறோம் என்ற பெயரில், மாணவர்களைக் குழப்பும் வேலையில் மத்திய அமைச்சர் கபில்சிபல் ஈடுபட்டுள்ளார். அவரின் செயல்பாடுகளை நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் முடிவை, மாநில கல்வி வாரியம், மாநில கல்வி ஆராய்ச்சி கவுன்சில்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய நாங்கள் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நன்று கலந்து ஆலோசித்த பின்னரே இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பது நல்லது. கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தேசிய அளவில் ஒரு பொதுவான கொள்கை இருக்க  முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்