உள்ளூர் செய்திகள்

திருச்சி என்.ஐ.டி.,யில் புதுவைக்கு இடங்கள்: நாராயணசாமி வலியுறுத்தல்

புதுடில்லி: திருச்சி என்.ஐ.டி.,யில் வழக்கமாக புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஐந்து இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் புதுச்சேரி லோக் சபா உறுப்பினருமான நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். என்.ஐ.டி., கல்வி நிறுவன அட்மிஷனில் புதுச்சேரி மாநிலத்திற்கான ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ஆண்டு வழங்கப்படாதது குறித்தும் அதனால் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் தினமலரில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, புதுச்சேரி மாணவர்களுக்காக என்.ஐ.டி.,களில் 38 இடங்களை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. புதுச்சேரி மாணவர்களுக்கான இந்த 38 இடங்களும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு என்.ஐ.டி.,களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி என்.ஐ.டி.,யில் புதுச்சேரி மாணவர்களுக்காக ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய அரசு அறிவிப்பின்படி திருச்சி என்.ஐ.டி.,யில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரிக்கு அருகே உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தில் திருச்சி என்.ஐ.டி.,யில் புதுவை மாணவர்களுக்கு வழக்கமாக ஒதுக்கீடு செய்யப்படும் ஐந்து இடங்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி மாணவர்களின் கோரிக்கை குறித்து அறிந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, இதுகுறித்து மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு கடிதம் எழுதியுள்ளார். என்.ஐ.டி.,களில் புதுச்சேரி மாணவர்களுக்காக 38 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளதற்கு அக்கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ள அவர், கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் திருச்சி என்.ஐ.டி.,யில் ஐந்து இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் கபில் சிபலை நேரில் சந்தித்தும், இந்தக் கோரிக்கை குறித்து அவர் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்