அண்ணா பல்கலையில் அறிவியல் படிப்பு: ஐகோர்ட் தீர்ப்பு
கோவையில் உள்ள தனியார் கல்லூரிகள் நிர்வாக சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகள், இணைப்பு பெற்ற கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை நடத்துகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தான் இந்த வகுப்புகளை நடத்த முடியும். பொறியியல் கல்லூரிகள் இந்த வகுப்புகளை நடத்த முடியாது. ‘எனவே, பி.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்சி., உள்ளிட்ட வகுப்புகளை அண்ணா பல்கலைகழகம் நடத்தவோ, மற்ற கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கவோ தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:அறிவியல் சார்ந்த படிப்பு (அலையடு சயின்ஸ்) என்பதற்கு தெளிவான வரையறை இல்லை. இதை கல்வியாளர்கள் தான் கண்டறிந்து, இந்த பாடங்களை வகைப்படுத்த வேண்டும். பி.எஸ்சி., எம்.எஸ்சி., வகுப்புகளை நடத்துவதற்கு, பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளிடம் விண்ணப்பம் வந்துள்ளது. இதையடுத்து, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அனைத்து அம்சங்களையும் இந்த கமிட்டி ஆராய்ந்தது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் நடத்தும் பி.எஸ்சி., எம்.எஸ்சி., வகுப்புகளின் பாடத் திட்டங்கள், தற்போதைய தொழில் துறைக்கு ஏற்ற விதத்தில் உள்ளன என்றும், மற்ற தொழில்நுட்ப படிப்புக்கு இணையாக உள்ளது என்றும், நிபுணர் குழு முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளுக்கும், பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., வகுப்புகளுக்கும் சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இணைப்பு பெற்ற கல்லூரிகள் நடத்தும் பி.எஸ்சி., எம்.எஸ்சி., வகுப்புகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை எனக் கூற முடியாது. தொழிற் கல்வியில் உயர் தரத்தை பேண வேண்டும் என்பது தான் ஏ.ஐ.சி.டி.இ.,யின் நோக்கம். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள வழிமுறைகளின்படி, வகுப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு சட்டப் பிரிவுகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை துவங்குவதற்கான முடிவுகளை எடுத்துக் கொள்ள பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., வகுப்புகளை நடத்துவதற்காக கோவை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் அகடமிக் கவுன்சில் எடுத்த முடிவுகளை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. அறிவியல் சார்ந்த படிப்புகள் என்கிற வரையறைக்குள் வராத வகுப்புகள் எவை என்பதை மனுதாரர் அடையாளம் காட்டவில்லை. எனவே, அறிவியல் சார்ந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் துவங்கக் கூடாது என்றோ, இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றோ கூற முடியாது. இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.