உள்ளூர் செய்திகள்

கல்விக் கடன் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வங்கிகள்

சென்னை: பான்கார்டு, ஐ.டி., ரிட்டர்ன் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கேட்பதால், வங்கி கல்விக் கடன் பெறமுடியாமல் மாணவர்கள், பெற்றோர் சிக்கலில் தவிக்கின்றனர். ‘கல்விக் கடன்களை எவ்வித நிர்பந்தமும் இன்றி அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. சில வங்கிகள் மட்டும் பல்வேறு காரணங்களைக் காட்டி, கல்விக் கடன்கள் வழங்குவதை தவிர்த்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறப்படுவதாவது: கல்விக் கடன் பெற வங்கிகளை அணுகும் போது, பல்வேறு ஆவணங்களைக் கேட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பெரிய பட்டியலை வங்கிகள் நீட்டுகின்றன. பொறியியல், நிர்வாகம் தொடர்பான மேற்படிப்பை தொடர நான்கு லட்சம் ரூபாய் வரையிலான வங்கிக் கடன்களுக்கு எவ்வித தனிநபர் மற்றும் மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவையில்லை என்பது நடைமுறை. மாணவர்கள் தங்களது முந்தைய தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், நான்கு லட்சம் ரூபாய் வரை எவ்வித தனிநபர் உத்தரவாதமுமின்றி கல்விக் கடன் பெறலாம். பெற்றோர் வருமானம், சம்பளச் சான்றிதழ், சுய தொழில் செய்பவர்களின் வருமான வரிச் சான்று, மூன்றாண்டுகளுக்கான ஐ.டி., ரிட்டர்ன், வங்கி கணக்கின் மூன்று மாத அறிக்கை போன்றவற்றை வங்கிகள் கேட்கின்றன. மேலும், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விவரம், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டையும் பெற்றோர் சமர்ப்பிக்க, நிர்பந்திக்கிறது.சுயதொழில் செய்யும் ஆட்டோ டிரைவர், தையற்கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி போன்றோர் இதுபோன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க முடியுமா? அன்றாடம் பிழைப்புக்கு போராடுவோர் தங்களது மகன், மகளை எப்படியாவது கல்விக் கடன் பெற்று உயர்கல்வி படிக்க வைக்கவேண்டும் என்ற கனவு, வங்கிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் கலைந்து போகிறது. கடன் பெறும் மாணவர்களை அடிப்படையாக வைத்து தான், வங்கிகள் கடன் வழங்குகின்றன. உயர்கல்வியால் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் நிலையில், வங்கிக் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணையை சில வங்கிகள், பணியில் சேர்ந்திருக்கும் நிறுவனத்திடம் நேரடியாகப் பெற்றுவிடுகின்றன. கல்விக் கடன் வழங்கும்போதே, மாணவர்களை காப்பீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடுகின்றன. நான்கு லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடும் செய்து விடுவதால், படிக்கும் காலத்தில் விபத்தால் மரணம், படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், வங்கி கடனுக்கான தொகை காப்பீடு மூலம் பெறப்படுகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெற்றோர், மாணவரிடம் அனுமதியும் பெற்று விடுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவரது கல்விக் கடனைத் தெரிவித்து, படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ்களை வங்கிகள் வாங்கி விடுகின்றன. வேலை கிடைக்கும் போது, அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி சம்பளத்தில் பிடித்தம் செய்து, வங்கிக் கணக்கில் செலுத்தவும் கடிதம் அனுப்பிவிடுகின்றன. ஒரு குழந்தைக்கு வங்கிக் கடன் வாங்கி, அதை செலுத்த முடியாதபட்சத்தில், அடுத்த குழந்தைக்கு வங்கிக் கடன் வாங்குவது குதிரைக் கொம்புதான். அவர்கள் ‘பிளாக் லிஸ்ட்டில்’ வைக்கப்படுகின்றனர். இவ்வளவு பாதுகாப்புடன் வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. கொடுக்கும் கடனை வசூலிப்பதற்கு இப்படி பல்வேறு திட்டங்களை வங்கிகள் வைத்திருக்கும்போது, ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு குடைவது ஏன்? வசதியற்ற மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடன் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், வங்கிகள் கெடுபிடி செய்யக் கூடாது. இதனால், ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறப்படுகிறது. வங்கிகள் கடன் தர மறுத்தால் ரிசர்வ் வங்கியில் புகார் தரலாம் ஒரு வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “கல்விக் கடன் மட்டுமின்றி, மற்ற கடன்களிலும் சில விதிமுறைகள் இருந்தும், அதை வங்கி அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பணியிட மாற்றம், ஓய்வு போன்றவற்றில் பிரச்னை ஏற்படாதவாறு, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்,” என்றார். ரிசர்வ் வங்கி தரப்பில் கூறுகையில்,“நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. அப்படி கேட்டால், ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவிக்கலாம். ‘ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, போர்ட் கிளாசிஸ், சென்னை-1’ என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம். 044- 25399170, 25395963, 25399159 என்ற தொலைபேசியிலும் 044-25395488 என்ற பேக்ஸ் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்