மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ., பெற்றோர் கல்வி
வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய படிப்பு தொடங்கப்பட உள்ளது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். கற்பக குமாரவேல் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா அக். 13ம் தேதி கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடக்கிறது. யு.ஜி.சி., துணைத் தலைவர் வேதபிரகாஷ் பங்கேற்க உள்ளார். இதில் 89 பெண்கள் உட்பட 234 பேருக்கு பிஎச்.டி., பட்டம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இந்திய விண்வெளி அறிவியல் கழக விஞ்ஞானி வேதாச்சலத்திற்கு கவுரவ டாக்டர் ( டி.எஸ்சி) பட்டம் வழங்கப்பட உள்ளது. இவர் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி, தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் படித்தவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், விண்வெளி விஞ்ஞானிகள் சாராபாய், சதீஷ்தவானுடன் பணியாற்றியவர். இப் பல்கலையில் கடந்த ஆண்டு 37 ஆயிரம் பேர் பட்டம் பெற்றனர். இந்த ஆண்டு 10 ஆயிரத்து 403 பேர் கூடுதலாக பெறுகின்றனர். பட்டமளிப்பு விழாவையொட்டி மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து காலை 8 மணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பல்கலையில் பல துறைகளில் தொழில் நுட்பம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆய்வு படிப்புகளில், சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின் நிலை குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் தொலை நிலை கல்வியில் இந்தியாவில் முதன்முறையாக எம்.ஏ., பெற்றோர் கல்வி என்ற படிப்பு அறிமுகப் படுத்தப்பட உள்ளது. கிராமப்புற பெற்றோருக்கு குடும்ப உறவுகள், சட்டதிட்டங்கள், உயர்கல்வி, மாணவர்கள் நிலை, தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வியில் உள்ள எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்பு, பல்கலைகள் போன்றவை குறித்து தமிழ் வழியில் பாடம் அறிமுகப்படுத்தப்படும். பல்கலையில் தமிழ்ச் செம்மல் விருதுக்காகவும், இந்திய சயின்ஸ் காங்கிரஸ் என்ற விருதுக்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்கலையில் 103 ஆசிரியர்கள், தொலை நிலை கல்வியில் 21 பேர், நிர்வாகத்தில் 89 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆறாவது சம்பள கமிஷன் அடிப்படையில் பேராசிரியர்களின் பதவிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதற்கேற்ப அரசு உத்தரவு வந்த பின் நியமனம் செய்யப்படுவர். இப்பல்கலையில் கண்டுபிடிப்புகளுக்கான பேடண்ட் உரிமை முதலில் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே ஏற்ப அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்படும். அனைத்து பல்கலையிலும் பெண்கள் கல்வி மையம் துவக்க யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. மதுரையில் இதனை துவக்கி வைக்க ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஒரே நாளில் தொலை நிலை கல்வி தேர்வு, யு.ஜி.சி., நெட் தேர்வு வருவதாக கூறுகின்றனர். ஒரே சமயத்தில் இருதேர்வும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்கலையில் மாணவர் விடுதிகள், நூலகம் மேம்படுத்துதல், பல்கலை வளாகத்தையே பசுமை வளாகமாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார். பதிவாளர் சிங்காரம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகையா உடனிருந்தனர்.