இந்திய மாணவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்தார். ஆஸ்திரேலிய மக்கள் சகிப்புத் தன்மை நிறைந்தவர்கள்; வன்முறையையும் இன வேறுபாட்டையும் அறவே வெறுப்பவர்கள் என்று ஸ்மித் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையேயான வலுவான உறவின் முக்கியத்துவத்தையும் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பொதுவான நலன்கள் குறித்தும் அப்போது ஸ்மித் வலியுறுத்திப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் விரிவடைய வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட இரு அமைச்சர்களும் இரு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது இது குறித்து சந்தித்து விவாதிப்பது அவசியம் என்பதையும் வலியுறுத்தினர். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு புத்துயிர் ஊட்ட இந்தியா எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை ஸ்மித் பாராட்டினார். எதிர்கால சவால்களைச் சமாளிக்க ஆசிய- பசிபிக் சமுதாயத்தை உருவாக்க ஆஸ்திரேலியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து இந்தியா தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை பராமரிப்பதில் ஜி20 அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று இருநாட்டு அமைச்சர்களும் தெரிவித்தனர். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச் செய்வதில் ஆஸ்திரேலியாவின் ஆதரவு எப்பபோதும் உண்டு என்பதைத் தெரிவித்த ஸ்மித், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்திய இடம் பெற ஆஸ்திரேலியா உதவும் என்றார். பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்கிழக்கு ஆசிய சங்க ( சார்க்) மாநாடுகளில் ஆஸ்திரேலியா பார்வையாளராக இடம் பெற்றிருப்பது குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, தென்கிழக்கு ஆசிய வளர்ச்சியில் ஆஸ்திரேலியா காட்டும் ஆர்வத்தையே இது வெளிப்படுத்துகிறது என்றார். அணு ஆயுத பரவல் தடுப்பை இரு நாடுகளுமே கடுமையாக ஆதரித்து வருகின்றன. மும்பை தாக்குதல் குறித்து இரு அமைச்சர்களும் கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் போராடும் என்றனர். இரு நாடுகளுக்கும் இடையே புலனாய்வு, சட்ட அமலாக்கல், எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூடுதல் ஒத்துழைப்பு தேவை என வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவை வலுப்படுத்த இருநாட்டு இளைய அரசியல் தவைர்களின் சந்திப்புக்கான விவரம் குறித்தும் பேசப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுப்பெறும் என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர். நவம்பரில் இந்தியா- ஆஸ்திரேலியா வட்ட மேஜை மாநாடு நடைபெற உள்ளது. இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பை குறிப்பிட்ட இரு அமைச்சர்களும் இருநாடுகளுக்கும் இடையேயான பொதுத்துறை உறவை அதிகரிக்க ஆஸ்திரேலியா அளித்து வரும் ஆதரவை வரவேற்றனர். - நமது ஆஸ்திரேலிய நிருபர் கோவிந்தராஜ்