உள்ளூர் செய்திகள்

பெருநகரங்களில் அனைவருக்கும் கல்வி திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை சார்பில் பெருநகரங்களில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் குறித்த தேசிய அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. மனித வளத்துறை இயக்குனர் பி.கே.திவாரி தலைமை வகித்தார். இதில் 16 மாநில அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களில் அனைவருக்கும் திட்டம் மூலம் அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க திட்டமிடுவது, படிப்பில் இடைநிற்கும் மாணவர்களை கண்டறிந்து தொடர்ந்து கல்வி கற்பது குறித்து ஆய்வு நடந்தது.   இதில் மாநில திட்ட இயக்குனர் வெங்கடேஸ்வரன் பேசியதாவது: சென்னை, மதுரை, கோவை போன்ற பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரங்களில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 824 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் வரும் நிதியாண்டில் (2010- 2011) இந்த மூன்று நகரங்களுக்குமான திட்டங்களுக்கென்று தனி பட்ஜெட் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தெருவோர குழந்தைகள், இடம் பெயர்ந்து வந்த குழந்தைகள், குடும்பப் பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். தமிழகத்தில் அர்பன் செல் (நகரக்குழு) அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் மேற்கண்ட மூன்று நகரங்களில் அமல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்