பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி உபயோகம் மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கம், புதுச்சேரி பல்கலைக்கழக மரபு மற்றும் பண்பாட்டு அரங்கில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து மத்திய இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி பேசியதாவது: உலக அளவில் 6,000 மொழிகளும், ஆசியாவில் 2700 மொழிகளும் இந்தியாவில் 200 மொழிகளும் உள்ளன. இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மொழி என்பது நமது எண்ணங்களை தெரிவிக்கின்ற ஒரு வாகனம் போன்றது. ஆரம்ப காலங்களில் எந்த மொழிக்கும் வரி வடிவம் கிடையாது; பேச்சுமொழியிலேயே இருந்தன. நாளடைவில் நமது எண்ணங்களை எடுத்துச் சொல்ல எழுத்து வடிவமும் இன்றியமையாததாகி விட்டது. ஒவ்வொரு மொழியில் உள்ள இலக்கியங்கள் அந்த கால கட்டத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. எனவே எந்த மொழி இலக்கியத்தையும் ஒதுக்கி விட முடியாது. எந்த சிறு மொழியும் அழிந்து விடக்கூடாது, அந்த மொழிக்கே உரிய பாரம்பரியம், கலாசாரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. மத்திய அரசும் மொழி பெயர்ப்பு மையத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு இலக்கியத்தில் உள்ள தலைசிறந்த படைப்புகளை வேறு மொழிக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதன்மூலம் பிற மொழிகளின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், இலக்கிய வளத்தை பிறரும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தி மொழி, அலுவலக ஆட்சி மொழியாக திகழ்ந்து வருகிறது. இந்தி மொழியை கற்றுக் கொள்வது அவரவர் கடமையாகும். தாய்மொழியான பிராந்திய மொழியையும் பேணி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நடந்த அமர்வுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தி உபயோகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் தரீன், ஆரோவில் பவுண்டேஷன் ராமசாமி, மனித வள மேம்பாட்டு அமைச்சக இணை செயலாளர் அனிதாபட் நாயக்கர் ஜெயின், நவோதயா வித்யாலயா சமிதி இணை ஆணையர் அண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக் கழக வேதியியல் துறைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி திறந்து வைத்தார்.