மாணவர் சேர்க்கையில் குளறுபடி: சட்டக்கல்லூரி மாணவர்கள் தவிப்பு
திருநெல்வேலி: சட்டக்கல்லுாரி மாணவர் சேர்க்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் புகார் அளித்தும் தீர்வுகாணப்படவில்லை.தமிழகத்தில் டாக்டர் அம்பேக்தர் சட்டப் பல்கலையின் கீழ் சென்னையில் இரண்டு கல்லுாரிகள் உட்பட தமிழகம் முழுவதும் 11 கல்லுாரிகள் உள்ளன. பிளஸ் 2 முடித்து 5 ஆண்டு சட்டம் பயிலும் மாணவர்களும், ஏற்கனவே ஏதாவது பட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகள் சட்டம் பயிலும் மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.2016--2017 கல்வி ஆண்டு வரை இரு தரப்பு மாணவர்களும் 100 சதவீதம் எழுத்து தேர்வு மூலம் பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்றனர். 2017--2018 கல்வி ஆண்டு முதல் 5 ஆண்டு, 3 ஆண்டு மாணவர்களுக்கு புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி 70 சதவீத எழுத்து தேர்வும், 30 சதவீத உள்மதிப்பீட்டு முறையும் கடைப்பிடிக்கப்பட்டது.முழுவதும் எழுத்து தேர்வு முறையில் மாணவர்களுக்கு 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் புதிய தேர்வுமுறையில் 70 சதவீத்திற்கும் மேலாக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதுகலை சட்டம் பயில விண்ணப்பித்த இருதரப்பு மாணவர்களுக்கும் ஒரே கட் ஆப் அறிவிக்கப்பட்டு கலந்தாய்வும் முடிந்துவிட்டது.மொத்தமுள்ள 230 இடங்களில் பெரும்பான்மையான இடங்கள் புதிய தேர்வு முறையில் பயின்ற 3 ஆண்டு மாணவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பழைய தேர்வுமுறையில் படித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள 5 ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.கட் ஆப் மதிப்பெண்ணும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அரசுக்கும், சட்டக்கல்வி இயக்குனரகத்திற்கும் புகார் மனுக்கள் அனுப்பியும் சட்டக்கல்வி இயக்குனர் அலுவலகம் அதனை கண்டுகொள்ளவில்லை. எனவே கட் ஆப் முறையை மாற்றியமைத்து 5 ஆண்டு பயின்ற சட்ட மாணவர்கள் பாதிப்படையாதவாறு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.