விடுமுறை அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தயக்கம்
கோவை: மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் கடும் மழையில் பள்ளி செல்ல சிரமப்படுகின்றனர். கோவை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்தார். பாரதியார் பல்கலைக்கு துறைகளில் நடைபெற்று வந்த தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள், நவ., 20க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டரின் உத்தரவுக்கு தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை துணைவேந்தர்கள் கட்டுப்பட்டு விடுமுறை அளித்திருந்தும், மாவட்டத்தில் உள்ள சில சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டும் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. விடுமுறை என்ற கலெக்டரின் அறிவிப்பைக் கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ மாணவியர், தங்கள் பள்ளி செயல்படுமா, செயல்படாதா என்ற குழப்பம் அடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை விடுமுறையின் போது மாவட்ட கலெக்டரின் உத்தரவை கண்டு கொள்ளாமல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டும் வழக்கம் போல் இயங்குவதே, மாணவ மாணவியரின் குழப்பத்துக்கு காரணம். சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, மற்றும் சூலூர் விமானப்படைத் தளத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் பல மாணவ மாணவியர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். சில மாணவ மாணவியர் வரவில்லை. பள்ளி முதல்வர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து போன் செய்ததையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விடுமுறை அறிவித்தனர். பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர் மீண்டும் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர். கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் நல்லப்பன் கூறுகையில், “மத்திய அரசு பள்ளி என்பதால் விடுமுறை தொடர்பாக சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ., மண்டல உதவி ஆணையரின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் பெற்றோர் பலர் கேட்டுக் கொண்டதால் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து விடுமுறை அளிக்கப்பட்டது,” என்றார். கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில், “ஒரே மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் மழையால் அவதிப்படும்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மட்டும் எப்படி வெயில் அடிக்கிறது என தெரியவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர்தான் சேர்மன். அவரது உத்தரவையே காற்றில் பறக்கவிடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். அடுத்தமுறை மழைக்கான விடுமுறையை அறிவிக்கும் போது, ‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு பொருந்தும்’ என கலெக்டர் அறிவித்தால், காலை 6.30 மணிக்கே கிளம்பிச் செல்லும் மாணவ மாணவியரின் அவதியை தடுக்கலாம்.