‘‘கேட்’ தேர்வு அடுத்த ஆண்டும் ஆன்லைனில் நடைபெறும்’
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற ‘கேட்’ தகுதி தேர்வு மதிப்பெண் அவசியம். முதல்முறையாக இந்தாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. பத்து நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ள இத்தேர்வு நடந்த நான்கு நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆன்-லைனில் நடத்தப்படுவதற்கு சில தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டும் ‘கேட்’ தேர்வு ஆன்-லைனிலேயே நடத்தப்படும். அதற்குள் தொழில்நுட்ப கோளாறு முற்றிலுமாக சரிசெய்யப்படும் என்று ஐ.ஐ.எம். லக்னோ பேராசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழு தலைவர் ஹிமான்சு ராய் தெரிவித்தார். தற்போதைய குளறுபடிக்கு மிகவும் வருந்துகிறோம். இதன் மூலம் பாடம் கற்றுள்ளோம். கேட் தேர்வு ஆன்-லைனில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால், நாம் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். இந்த பிரச்னை மீண்டும் எழாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.