மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய நடிகர் விஜய்
அரசியலுக்கு வரும் ஆவலுடன் உள்ள நடிகர் விஜய் அதற்கான காய்களை அடுத்தடுத்து நகர்த்தி வருகிறார். இதுவரை தன் ரசிகர்கள் வாயிலாக அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தவர், முதல் முறையாக சென்னையில் நேற்று முந்தினம் தனி மேடை ஏறி பேசியுள்ளார்.வைர நெக்லஸ் பரிசுபள்ளி இறுதி தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ - மாணவியரை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசும், பண உதவியும் அளித்து பாராட்டினார். அவர்கள் மத்தியில் முதல் முறையாக அரசியல் பேசிய விஜய் திராவிட கட்சிகளின் பெயரை சொல்லாமல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போக்கை கடுமையாக சாடினார். மேலும் அவரது அடுத்த படமான லியோ முதல் பாடல் அவரது பிறந்த நாளில் வரும் 22ல் வெளியாக உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார். அவர் அரசியலில் களமிறங்குவதை அறிவிக்கும் விதமாகவே அந்த படத்தின் நான் ரெடி என்ற பாடல் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை நீலாங்கரையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சட்டசபை தொகுதி வாரியாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு, நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசளித்தார். மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:இது போன்ற விழாவில் முதல் முறையாக பேசுகிறேன். மனதுக்கு ஏதோ பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களை சந்திப்பது மகிழ்ச்சி. உங்களை மாதிரி மாணவன் அல்ல நான்; சராசரி மாணவன் தான். பட்டம் வாங்குவது மட்டும் முழுமையான கல்வி கிடையாது. படிப்பு, ரேங்க் முக்கியம்; அதை தாண்டி குணத்துக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெற்றோர் கண்காணிப்பில் இருந்து விலகி, வெளியில் செல்லும்போது சுதந்திரம் கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்துங்கள்; வாழ்க்கையை அனுபவியுங்கள். அதேநேரம் சுய அடையாளத்தை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.போலியானவைதற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் இருக்கிறோம். சமூக வலைதள தகவலில் பெரும்பான்மையானவை போலியானவை. எதை நம்பலாம் எதை நம்பக் கூடாது என்பதை அறிந்து கொள்ள பாடப் புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும். எனக்கு படிக்கும் பழக்கம் முன்பு கிடையாது; சமீப காலமாக வந்துள்ளது. முடிந்த வரை படியுங்கள். எல்லா தலைவர்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், ஈ.வெ.ராமசாமி, காமராஜர் குறித்து படியுங்கள். நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; மற்றதை விட்டு விடுங்கள். இது தான் உங்களுக்கான செய்தி.நல்ல தலைவர்கள் தேர்வுநீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை தேர்வு செய்யப் போகிறீர்கள். ஆனால் நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது தான் தற்போது நடக்கிறது. நாமும் அதைத் தான் செய்கிறோம்; அதாவது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறோம். ஒரு தொகுதியில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் வீதம் 1.50 லட்சம் பேருக்கு கொடுத்தால் 15 கோடி ரூபாய் செலவாகும். அவ்வளவு கொடுப்பவர், முன்பு எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்... சிந்தித்து பாருங்கள்! ஒவ்வொரு மாணவ - மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி ஓட்டு போடாதீர்கள் எனக் கூறுங்கள். நீங்கள் கூறினால் நடக்கும்; இது நடக்கும்போது கல்வி முறை முழுமை அடையும்.இவ்வாறு அவர் பேசினார்.