பள்ளிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் உறுதி
திருப்போரூர்: திருப்போரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 9:00 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வகுப்பறை, சத்துணவு கூடம், தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.ஒரு வகுப்பறைக்கு சென்று, மாணவியை பாடத்தை படிக்க கூறினார். தொடர்ந்து பள்ளியின் தேவைகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். அதற்கு தலைமை ஆசிரியர், தற்போது, மேல்நிலை வகுப்புக்கு இரண்டு ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனால், மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதல் வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என கூறினார். இது தொடர்பான கோரிக்கை மனுவை, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கணேசன் அமைச்சரிடம் வழங்கினார்.அதைத்தொடர்ந்து, மகளிர் பள்ளியை ஒட்டியுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு, பள்ளி அலுவலகஅறையும், ஆய்வக அறையும் பழுதடைந்துள்ளது, புதிய கட்டடம்கட்ட வேண்டும் என தலைமை ஆசிரியர் கோரிக்கை வைத்தார். பின் மாணவர்களின் விளையாட்டு திறன் சார்ந்து, உடற்கல்வி ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளிகளின் அனைத்து தேவைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். ஆய்வின் போது திருப்போரூர் வி.சி., எம்.எல்.ஏ., பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.