சம்பளம் தர பணமின்றி தவிக்கும் சென்னை பல்கலை
சென்னை: சம்பளம் தரக்கூட பணமின்றி சென்னை பல்கலை தவிப்பதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை பல்கலை பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில், 500 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலை, இப்போது சம்பளத்திற்கு கூட நிதியின்றி தவிக்கிறது. இதற்கு தமிழக அரசு நிதி வழங்க மறுப்பதே காரணம். ஊதிய செலவில், 35 சதவீதத்தை மட்டும் தமிழக அரசு ஏற்பதால், பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கு, தமிழக அரசு, 177 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. தமிழகத்தின் அனைத்து பல்கலைகளிலும், இதே நிலை தான் காணப்படுகிறது. எனவே, பல்கலைகளின் நிதி நெருக்கடியை தீர்க்க, தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.