இந்தியாவில் முதலீடு: கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் அறிவிப்பு
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். மோடியை சந்தித்த பிறகு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியதாவது: இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் நிதிக்காக கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. இதனை மோடியிடம் தெரிவித்து உள்ளேன். குஜராத்தில், சர்வதேச பின்டெக் செயல்பாட்டு மையம் நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.மோடியை, அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜெஸ்ஸி சந்தித்தது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர் அடுத்த 7 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு உதவி, வேலைவாயப்புகளை அதிகரிப்பது, டிஜிட்டல் மயம் குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவில் 1 கோடி சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. 2025க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். ஏற்கனவே, 62 லட்சம் சிறு வணிகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செயற்கை நுண்ணறிவு முதல், இந்தியர்களின் வாழ்க்கை மேம்படுத்துவது வரையிலான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், சிஇஓ சத்ய நாதெல்லாவும் ஆலோசனை நடத்தினர். மிகவும் துடிப்பான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு புகலிடமாக இந்தியா உள்ளது. இந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள சந்தைகளில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.