உள்ளூர் செய்திகள்

உயர் அழுத்த மின்பாதை: மாணவர்களுக்கு பாதிப்பு அபாயம்

ஓசூர்: ஓசூர், ஜூஜூவாடி அரசு பள்ளி வளாகத்தில் செல்லும் உயர் மின் அழுத்த மின்பாதையால், மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,689 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தின் வழியாக, உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. மேலும், பள்ளி நுழைவுவாயிலுக்கு மிக அருகில் மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் கைக்கு எட்டும் அளவிற்கு மின்கம்பிகள் ஆபத்தான முறையில் தொங்குகின்றன. இதனால், மாணவ, மாணவியரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம், பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால், மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன், 11.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மாணவியருக்கு கழிப்பறை கட்டும் பணி துவங்க உள்ளது. இந்த கட்டுமான பணிக்கு, உயர் மின் அழுத்த மின்பாதை இடையூறாக உள்ளது.எனவே, பள்ளி வளாகம் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்று வழியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்வாக அமைத்து, பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென, மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், ஆசிரியர்களுடன் சென்று, மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார். உயிர் சேதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்