மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் (சிறப்பு வகுப்பு) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இந்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் கடந்த ஜூன் 12ம் தேதி திறந்தன. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இனி 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வகுப்புகள் மாலை 5 மணி அல்லது 5:30 மணிவரை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வகுப்புகள் கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.