தமிழ் பள்ளிகள் பிரச்சினைகள் தீர்க்க முதல்வரிடம் மனு
பெங்களூரு: கர்நாடகாவில் தமிழ் பள்ளிகள் சந்திக்கும் அவல நிலையை சரி செய்யும்படி, கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளித்தனர்.கர்நாடகாவில் 1970 - 80களில் 600க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இயங்கின. புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகள் தாய்மொழி கற்க வேண்டும் என்ற நோக்கில் சேர்த்தனர். அதன்பின் பல்வேறு காரணங்களால் படிப்படியாக தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது 60க்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றை தீர்த்து வைக்கும்படி, கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரிகள் ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன் தலைமையில், செயலர் கார்த்தியாயினி, பொருளாளர் பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் நேற்று முதல்வர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்து மனு அளித்தனர். இதுபோன்று சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கல்வி துறை கமிஷனர் காவேரி ஆகியோரை சந்தித்தும் மனு கொடுத்து விளக்கினர்.மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:* கர்நாடகாவில் உள்ள தமிழ் வழி பள்ளி ஆசிரியர்களை எந்த அடிப்படையும் இன்றி மற்ற மொழி பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இது மாணவர்கள், ஆசிரியர்களிடையே கல்வி மீதான ஆர்வத்தை குறைக்கிறது. இது விசாரிக்கப்பட வேண்டும்.* தமிழ் ஆசிரியர்கள் இடமாற்றத்தால், தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர். பலர், வலுக்கட்டாயமாக வேறு மொழி வழி பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர்.* அரசு தமிழ் பள்ளிகளில் 300 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.* குறிப்பிட்ட தமிழ் ஆசிரியர்களை, அவர்கள் இருப்பிடத்தில் இருந்து, 90 கி.மீ., துாரத்துக்கு இடமாற்றிய சம்பவமும் நடந்துள்ளது. எனவே ஆசிரியர்களின் நலன் கருதி, குறுகிய இடத்துக்கு இடமாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும்.* அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை ஐந்து ஆண்டுகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இப்பிரச்னைகளில் தலையிட்டு அவல நிலையை சரி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.