உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் நியமன தாமதத்திற்கு கவர்னரே காரணம்: பொன்முடி

சென்னை: கவர்னர் என்ன அரசியல் செய்தாலும், தமிழகத்தில் எடுபடாது. துணை வேந்தர்கள் நியமனம் தாமதமாவதற்கு கவர்னரே காரணம், என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.அவர் அளித்த பேட்டி:கவர்னர் ரவி, தொடர்ந்து அரசியல் செய்கிறார். அவரால் நியமிக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களை அழைத்து நேற்று முன்தினம் கூட்டம் நடத்தி உள்ளார்.கவர்னர் அரசியல் செய்வதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட அனைவரும் கூறி விட்டனர். இனிமேலாவது அவர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். பல்கலைகளின் வேந்தராக உள்ள கவர்னர் சிண்டிகேட், செனட் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக கூறியிருக்கிறார். கொரோனா காலத்தில் ஆன்லைன் வழியாகவும் தலைமைச் செயலகத்திலும் சில கூட்டம் நடத்தப்பட்டன. பல்கலைகளில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என கூறிய கவர்னர், தன் மாளிகையில் நேற்று முன்தினம் கூட்டத்தை கூட்டியுள்ளார்.ஏதேனும் சொல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். உயர் கல்வித் துறை செயலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார். ஆனால் இணை வேந்தரான நான் இல்லாமலேயே எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்துகிறார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை வாழ்த்த வாய்ப்பு அளிப்பதில்லை. நிகழ்ச்சி நிரலை துணை வேந்தர் தயார் செய்வார். தற்போது கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்படுகிறது. அனைத்திலும் கவர்னர் தன் ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணம்.சிண்டிகேட் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தக் கூடாது என்ற கவர்னர் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலை பட்டமளிப்பு விழாவை கவர்னர் மாளிகையில் நடத்துவதாக அறிவித்துள்ளார்.கோவை பாரதியார் பல்கலை, ஆசிரியர் பல்கலைக்கு துணை வேந்தர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதற்கான குழுவில் சிண்டிகேட்டிலிருந்து ஒருவர், அரசால் நியமிக்கப்படும் ஒருவர், கவர்னரால் நியமிக்கப்படும் ஒருவர் இடம்பெற வேண்டும். இவர்களை நியமித்து பட்டியல் அனுப்பிய பின் அவர்களோடு, யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு உறுப்பினர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்கிறார். ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற தவறுகளை செய்கிறார்.உயர் கல்வித் துறையில் தவறு இருந்தால் என்னிடம் கூறலாம்; துறை செயலரிடம் கூறலாம். பத்திரிகைகளிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இவருக்கு வேண்டியவர்களை திணிக்க புதிய சட்டம் கொண்டு வரக் கூடாது. துணை வேந்தர் நியமனம் தாமதத்திற்கு, கவர்னர் தான் காரணம். அவர் நியமிக்கும் நபர்கள் அனைவரும், வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல் கவர்னர் செயல்படுகிறார். அனைத்து துறைகளிலும் அவர் மூக்கை நுழைத்துள்ளார். அவர் பா.ஜ.,வை சேர்ந்தவரா, அ.தி.மு.க.,வை சேர்ந்தவரா என சந்தேகத்திற்குரிய நிலையில் உள்ளார். அவர் என்ன அரசியல் செய்தாலும், தமிழகத்தில் எடுபடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்