பள்ளி அறிவுக் கண்காட்சியில் புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு
சென்னை: கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நான்காம் ஆண்டு அறிவுக் கண்காட்சி-2010 நேற்று துவங்கியது. எழுத்தாளர் சாருகேசி கண்காட்சியை துவக்கி வைத்தார். உலக வெப்பமயமாதல், மழைநீர் சேகரிப்பு, சேதுசமுத்திர திட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உறையிடப்பட்ட உணவுகளால் ஏற்படும் பாதிப்பு ஆகிய தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இது குறித்து, பள்ளி தாளாளர் தியாகராஜன் கூறுகையில், ‘இந்தாண்டு நடத்தப்படும் அறிவுக் கண்காட்சியில், உலகில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியர் ‘இன்டர்நெட்’ மூலம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.