மருத்துவ தரவரிசை பட்டியல்: சேலம் மாணவி முதலிடம்
2023 - 2024ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ மாணவியர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.கிருத்திகா மகிழ்ச்சிதர வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிருத்திகா, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம், வீரக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர். தாயார் கலைச்செல்வி. இவர், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில் மாணவி கிருத்திகா, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அவரது தாய் கலைச்செல்வி, சகோதரர் கவுதம் ஆகியோர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.கிருத்திகா கூறியதாவது: பெத்தநாயக்கன்பாளையம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வரை படித்த நான், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த நிலையில் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி 211 மதிப்பெண்கள் பெற்றேன். இருந்த போதும் எனக்கு கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு எழுதினேன். தற்போது , 569 மதிப்பெண் . அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து நீட் தேர்வில் கடந்த முறை மதிப்பெண் எடுத்த போதிலும் கவுன்சிலிங் வரை சென்று மருத்துவம் படிக்க முடியாது மிகுந்த வருத்தமாக இருந்தது. தொடர்ந்து தன்னம்பிக்கையோடு படித்து நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறேன் என எண்ணுகிறேன். நீட் தேர்வு எழுதுபவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதுபோன்ற எண்ணம் தேவையில்லை. தொடர்ந்து தன்னம்பிக்கையோடு படித்தால் வெற்றி பெறலாம். தன்னம்பிக்கை இழக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.