மதுரை நுாலகத்திற்கு மாணவர்களை அழைத்து செல்ல வேண்டுகோள்
சிவகங்கை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயனடைய செய்ய வேண்டும், என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது:பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், உயர் கல்வி வழிகாட்டி சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக பொருளாதார வளர்ச்சி பெறாத கிராமப்புற மாணவர்களை கொண்ட தென் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தை விளக்கி, இவர்களின் அறிவு வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்.இதற்கு அரசு மதுரையில் நிறுவியுள்ள நுாற்றாண்டு நினைவு நுாலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தங்களின் எதிர்கால கனவு மெய்ப்பட உதவும் வகையில் தென் மாவட்ட வாரியாக, நாள் ஒன்றுக்கு 10 பள்ளிகள் வீதம் அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்டக்கல்வி அலுவலர், கல்வித்துறை ஒருங்கிணைந்து மாணவர்களை நேரில் அழைத்து செல்லும் திட்டம் உருவாக்கிட வேண்டும். கற்றல் பணி பாதிக்காமல் இச் செயல்பாடுகளை ஆக., முதல் டிச., மாதத்திற்கு முன்பாக செயல்படுத்திட வேண்டும், என தெரிவித்துள்ளார்.