ஆசிரியர் பற்றாக்குறையில் ஆதி திராவிடர் நல பள்ளி
நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே அதிகரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆங்கிலம், அறிவியல் கற்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்லல் ஒன்றியம் அதிகரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளி இயங்கி வருகிறது. ஆதி திராவிடர்களுக்கான இப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது 120 மாணவர்களே படிக்கின்றனர். மொத்தத்தில் 4 ஆசிரியர்களே உள்ளனர். கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் 3 பேரும் ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டனர். இதனால் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி காந்தி கூறுகையில், முன்பு நான் படிக்கும் போது மிகவும் நன்றாக நடந்த பள்ளியில் தற்போது பாடம் நடத்த ஆசிரியர்கள்இல்லை. வெளியூர் சென்று படிக்க நினைத்தால் பஸ் வசதி கூட கிடையாது. அருகில் எந்த அரசுப்பள்ளியும் இல்லை. திருப்புத்துார் சென்று தான் படிக்க வேண்டும். எனவே போதிய ஆசிரியர்களை நியமித்து மக்களின் கல்வி நின்று போகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.