சித்த மருத்துவ சுவடிகள் படித்து அறிய பயிற்சி
சென்னை: சித்த மருத்துவ சுவடிகள் விரைவில் நுால் வடிவம் பெறும் என அரசு சித்த மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் சங்கர் கூறினார்.சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ் மருத்துவர்களுக்கான 10 நாள் சுவடி பயிற்சி நடக்கிறது. இதில், சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பயிலும் ஆய்வு மாணவர்கள், சித்த மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் என 33 பேர் பங்கேற்றுள்ளனர்.நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், ஓலைகளில் உள்ள மருத்துவ முறைகளை பரவலாக்கும் வகையில், இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.இதுகுறித்து, பயிற்சியில் பங்கேற்ற அரசு சித்த மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் சங்கர் கூறியதாவது:நோயின் வகைகள், தன்மைகள், மருத்துவ முறைகள், மருந்து தயாரிப்பு முறைகளை பாடல் வடிவில் சித்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவற்றை, தற்போது உள்ள மருத்துவர்களால் முழுமையாக அறிய முடியவில்லை. தமிழ் மருத்துவ சுவடி பயிலரங்கில், தமிழ் பிராமி, கிரந்தம், வட்டெழுத்து ஆகிய தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும், ஓலைச்சுவடி எழுத்துகளை அடையாளம் காண்பது பற்றியும், கல்வெட்டு ஆய்வாளர்கள் விரிவாக விளக்கினர். இதன் வாயிலாக ஓலைச் சுவடிகளை புரிந்து கொள்ள முடியும். பழைய மருத்துவ சுவடிகளை படித்து, நுாலாக தொகுத்து பதிப்பித்தால், தமிழ் மருத்துவ துறை புதிய வடிவம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.