ஆதி திராவிடர் விடுதியில் முறைகேடு: அமைச்சர் நடவடிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு ஆதி திராவிடர் நலத்துறை மாணவர்கள் தங்கும் விடுதியில், அமைச்சர் கயல்விழி திடீரென ஆய்வு செய்தார்.அப்போது, விடுதியில் இல்லாத, 56 மாணவர்களை கணக்கு காண்பித்து முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. விடுதி வார்டன் மற்றும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் எச்சரித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மணம்பேடு ஊராட்சியில், அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. 1990ல் கட்டப்பட்ட இந்த விடுதியில் தற்போது, 66 மாணவர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு வார்டன், ஒரு இரவு காவலர், ஒரு துாய்மை பணியாளர், இரண்டு சமையலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மாணவர் விடுதியில் நேற்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவர் தங்கும் அறைகள் காலியாக இருந்ததால், அமைச்சர், ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தார்.மாணவர்கள் தங்குவதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது. இல்லாத மாணவர்களுக்கு அதிகப்படியான உணவு சமைத்து வைத்திருந்த நிலையில், உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் அறையை ஆய்வு செய்த போது, இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால், கோபமான அமைச்சர் கயல்விழி, அதிகாரிகளிடம் விசாரித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி செல்வராணி மற்றும் விடுதி வார்டன் அர்ச்சுனன் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.பின், வார்டனிடம் அமைச்சர், எத்தனை மாணவர்கள் உள்ளனர்? புதிதாக எத்தனை மாணவர்களை சேர்த்துள்ளீர்கள்? என்று கேட்டார். அப்போது விடுதி காப்பாளர், மாணவர் விபரங்கள் அடங்கிய பதிவேட்டை அமைச்சரிடம் அளித்தார். இதையடுத்து, ஒரு சில மாணவர்களின் மொபைல் போனில், அமைச்சர் நேரடியாக தொடர்பு கொண்டபோது, அந்த மாணவர்கள், விடுதியில் சேர மனு அளித்தோம். ஆனால், சேரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து டென்ஷனான அமைச்சர், பதிவேட்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எவ்வளவு பேர் தங்குகின்றனர்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வார்டன், 10 பேர் தங்குவதாக மழுப்பலாக பதிலளித்தார்.ஆத்திரமடைந்த அமைச்சர், 66 மாணவர்கள் இருப்பதாக பதிவேட்டில் உள்ளதே? பதிவேட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் விடுதியில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொன்னேரியில் உள்ள ஆதி திராவிட நல மாணவ - மாணவியர் விடுதிகளிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.