மாணவர்கள் இடையூறுகளை தகர்த்தெறிய வேண்டும்: நர்த்தகி நடராஜன்
போடி: இலக்கை அடைய மாணவர்கள் இடையூறுகளை தகர்த்தெறிய வேண்டும் என மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜன் பேசினார்.போடி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் இணை கல்வி கழகம் சார்பில் மாணவர்களுக்கான தமிழ் கனவு, தமிழ் மரபு பண்பாட்டு கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வசந்த நாயகி, துணை முதல்வர் திருநாவுக்கரசு, ஆர்.டி.ஓ., பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழக அரசு மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் நர்த்தகி நடராஜன் பேசுகையில், தமிழர் மரபும், நாகரிகமும், பெண்கள் மேம்பாடு மொழி, இலக்கியம், கலை, பண்பாடு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது, ஆசைப்படுவதை நிறுத்தாதீர்கள். வெளிச்சத்தை நோக்கி செல்ல வேண்டும். இலக்கை அடைய எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதனை மாணவர்கள் தகர்த்தெறிய வேண்டும்.உலகம் பரந்து கிடக்கிறது. தோற்று விடுவோம் என்று நினைக்காமல் ஒவ்வொரு மாணவரும் வெற்றி எனும் இலக்கை நோக்கி செல்ல வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சி மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார். விழாவில் போடி அரசு பொறியியல் கல்லூரி, சி.பி.ஏ., கல்லூரி, வீரபாண்டி அரசு கலைக் கல்லூரி, கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.