ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அரசு விழாவாக்க வலியுறுத்தல்
திருத்தணி: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். இவரது பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ராதாகிருஷ்ணனின், 135வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, அவர் தொடக்க கல்வி படித்த திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அவரது சிலைக்கு திருத்தணி வட்டார கல்வி அலுவலர் சலபதி, பள்ளி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் மாலை அணிவித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.அதே போல், திருத்தணி காந்திரோட்டில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6 அடி உயரமுள்ள அவரது சிலைக்கு, திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், ராதாகிருஷ்ணன் பிறந்த ஊரான வெங்கடாபுரம் கிராமத்தில், அப்பகுதி மக்கள் அவரது படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திருத்தணியில் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்ற ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணிமண்டபம் அமைக்க வேண்டும்திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் அஸ்வின்குமார், திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து, அவர் பிறந்த ஊரான திருத்தணி பி.வெங்கடாபுரம் கிராமத்தில், அரசு சார்பில் மணிமண்டபம்கட்ட வேண்டும். அவரது பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.