கலை, இசை, இலக்கியம் கர்நாடகா அரசு பெருமிதம்
மைசூரு: கலை, கலாசாரம், இசை, இலக்கியம், நடனத்துக்கு மைசூரு மன்னர், ஊக்கம் அளித்தது போன்று, காங்கிரஸ் அரசும் செய்து வருகிறது, என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில், தசரா பண்டிகையை ஒட்டி, 12 வெவ்வேறு தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சிகளை, நேற்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.உள்நாடு, வெளிநாடுளில் இசை கச்சேரிகள் நடத்தி, கலைத்துறைக்கு நீண்ட காலம் சேவையாற்றிய, 91 வயதான பத்மா மூர்த்திக்கு, ராஜ்ய சங்கீத வித்வான் விருதுடன், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம், சரஸ்வதி சிலையை முதல்வர் வழங்கி கவுரவித்தார்.பத்மா மூர்த்தி பேசியதாவது:நான் பிறந்து வளர்ந்து, படித்து, இசை கற்றது இங்கே தான். கர்நாடக சங்கீதத்துக்கு நான் ஆற்றிய அணில் சேவையை பாராட்டி, அரசு எனக்கு விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. கேட்பவர்கள் இல்லை என்றால், கலைஞரின் வாழ்க்கை வீணாகும். எத்தனை திறமைகள் இருந்தாலும், குடும்பத்தின் உதவி இல்லாமல் முன்னேற முடியாது. எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவளித்துள்ளனர். என் பெற்றோர் எனக்கு நல்ல ஆசிரியர்களை கொண்டு கல்வி கற்பித்தனர். கடவுள் அருளால் இந்த விருது கிடைத்தது.இவ்வாறு அவர் பேசினார்.பின் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:உள்நாடு, வெளிநாடுளில் இசை கச்சேரிகள் நடத்தி, கலைத்துறைக்கு நீண்ட காலம் சேவையாற்றிய பத்மா மூர்த்திக்கு காங்கிரஸ் அரசு விருது வழங்கியுள்ளது. கலை, கலாசாரம், இசை, இலக்கியம், நடனத்துக்கு மைசூரு மன்னர், ஊக்கம் அளித்தார். காங்கிரஸ் அரசும் அதை தான் செய்கிறது. கலை, கலாசாரத்துக்கு அனைத்து விதமான ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.