மாணவர்களிடையே அதிகரிக்கும் கோஷ்டி மோதல்: பெற்றோர்கள் அச்சம்
உளுந்தூர்பேட்டை: மாணவர்களிடையே அதிகரித்து வரும் இரு தரப்பு மோதல்களால் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.உளுந்தூர்பேட்டை பகுதியில் கோவில் திருவிழா காரணமாக இருதரப்பினரிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால் தற்போது பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி மோதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பெயரளவில் மட்டும் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளும் போலீசார், மொத்த விற்பனையாளர்கள், ஏஜன்டுகளை கைது செய்யாமல் இருந்து வருகின்றனர்.இது போன்ற சம்பவங்களால் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களிடையேமோதல்கள் அதிகரித்து வருகிறது.மக்கள் அதிகம் இருக்கும் இடமான பஸ் நிலையம், பஸ்சில் பயணிக்கும் போது மாணவர்களிடையே தாக்குதல் நடத்தி மோதி கொள்கின்றனர். மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்கும், பெண்கள், மாணவிகள் மீதும் தாக்குதல் நிகழ்கிறது.இந்த மோதல்கள் கிராமங்களில் பெரும் கலவரமாக மாறும் சூழல் நிலவி வருகிறது. இருதரப்பு மோதல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலைக்கு மாணவர்களே காரணமாகின்றனர்.இது போன்ற சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து மோதலை தடுக்கும் வகையில் முழு முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.