தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்வில் கரைபுரண்ட உற்சாகம்
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம். இந்த பொன்னாளில் கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் பிஞ்சு குழந்தைகளை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் தினமலர் நாளிதழ், வழக்கம்போல, இந்தாண்டும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில், அனைத்து மதத்தினரும் தங்கள் மழலைச் செல்வங்களுடன் உற்சாகமாக பங்கேற்றனர். பிரபலங்கள் விரல் பிடித்து நெல்மணியில் தங்கள் குழந்தைகள் 'அ'னா 'ஆ'வன்னா எழுதிப் பழகியதை பாசத்துடன் ரசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பாக வெளிவரும் பட்டம் இதழ் மற்றும் வேலம்மாள் நியூஜென் கிட்ஸ் பள்ளி இணைந்து, வடபழனி ஆண்டவர் கோவில், கிழக்கு தாம்பரம், ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஸ்ரம் மற்றும் மேடவாக்கம், வடக்குப்பட்டு சாலையில் உள்ள வேலம்மாள் நியூஜென் கிட்ஸ் பள்ளி வளாகத்தில் நடத்தின.வடபழநி ஆண்டவர் கோவிலில் நடந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.துரைசாமி, அவரது மனைவி கலைவாணி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோடி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, வடபழநி ஆண்டவர் கோவில் தக்காரும், கோவை தினமலர் நாளிதழ் பதிப்பாளருமான எல்.ஆதிமூலம், இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு, ஹிந்து அறநிலையத் துறை துணை கமிஷனர் ஹரிகரன், வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கனி, வடபழனி கவுன்சிலர் பாஸ்கர், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் ஆகியோர் பங்கேற்று, மழலையரின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை துவக்கி வைத்தனர்.கிழக்கு தாம்பரம், ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், கணிதவியல் அறிஞர் சடகோபன் ராஜேஷ், எழுத்தாளர் பிரபு சங்கர், ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கிரி சீதாராமன் ஆகியோர் பங்கேற்று, இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, அ னா, ஆ வன்னா அரிச்சுவடி எழுதி ஆரம்பித்து வைத்தனர்.அம்பத்துார் அடுத்த சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளி நடந்த நிகழ்வில், இந்திய விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, 'அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர்கள் இந்திரா சவுந்தரராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், வரலொட்டி ரங்கசாமி ஆகியோர், மழலையரின் விரல் பிடித்து, நெல் மணிகள் குவித்த தட்டில் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.மேடவாக்கம், வடக்குப்பட்டு சாலையில் உள்ள வேலம்மாள் நியூஜென் கிட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ், நாடக கலைஞர் டி.வி., வரதராஜன், சென்னை விமான நிலைய டி.ஐ.ஜி., ஸ்ரீராம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நிர்மலா ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.பிரபலங்களின் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிச்சுவடி எழுதிப் பழகியதும், பெற்றோர்கள் அருகே இருந்து கவனித்ததும், புகைப்பட கலைஞர்களால் படம் பிடிக்கப்பட்டு, அந்த புகைப்படங்கள் அடுத்த சில நிமிடங்களில், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டன.இந்தப் புகைப்படங்களை வாங்கி மகிழ்ந்த பெற்றோர், அதை தங்கள் மொபைல் போனில் பதிவேற்றி, 'வாட்ஸாப், பேஸ்புக்' உள்ளிட்ட வலைதளங்களில் பதிவேற்றம் செய்தும், உறவினர்களுக்கு அனுப்பியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.இதில், 1,500க்கும் மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள் பங்கேற்றன. அரிச்சுவடி எழுதிய உடன், அவர்களின் புகைப்படத்துடன் கூடிய, 'தினமலர்' நாளிதழின் சான்றிதழ் மற்றும் குழந்தைகளுக்கு ஓவிய புத்தகம், கலர் பென்சில் என, எல்.கே.ஜி., படிப்புக்கு தேவையான 1,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், குழந்தைகளுக்கு கேக், பிஸ்கெட், கடலை மிட்டாய் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டன.'அ'னா, 'ஆ'வன்னா எழுதுவது பழங்காலத்து முறை. நான் பள்ளியில் படிக்கும்போது, 1945ல் விஜயதசமியன்று தான் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பர். அப்போது, ஆசிரியர் தான் தட்டில் நெல் வைத்து ‛அ'னா, ‛ஆ' வன்னா கைபிடித்து எழுதுவார். இந்த பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - நல்லி குப்புசாமி, தொழிலதிபர்.வளர்ந்து வரும் நாடுகள், கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிற்கும் தான் முக்கியமாக செலவிட வேண்டும். ஆனால், நம் நாட்டில், இந்த இரண்டிற்கும் குறைவாகத் தான் செலவிடப்படுகிறது. நம்மை விட, 140 நாடுகள் கல்விக்கு அதிகம் செலவிடுகின்றன. நம் நாட்டில் உயர்கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இதனால், கல்விக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். - விஸ்வநாதன், வேந்தர், வி.ஐ.டி., பல்கலை.திருக்குறளில் குழந்தை செல்வத்திற்காக தனி அதிகாரமே உள்ளது. கல்வி எனும் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளின் பயணம், வெற்றியை தொட என் வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியை நடத்திய 'தினமலர்' நாளிதழுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். - ஐசரி கணேஷ், வேந்தர், வேல்ஸ் பல்கலை.குழந்தைகளை மடியில் அமர வைத்து, ‛அகரம்' எழுதுவது, பேரக்குழந்தைகளின் உறவை போன்று, மறக்க முடியாத அனுபவமாகி விட்டது. நாங்கள் குழந்தைகளையும், குழந்தைகள் எங்களையும் சந்திக்கும் இந்த இனிய நிகழ்வின் மூலம், குழந்தைகள் கல்விக்கான எழுத்தை, எழுத்தாளர்கள் மூலம் துவங்க வேண்டும் என சிந்தித்த, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. - இந்திரா சவுந்தரராஜன் எழுத்தாளர்.தமிழ் எழுத்தை அறிமுகம் செய்யக்கூடிய இந்த நிகழ்வு, கலாசாரம், பண்பாட்டின் தொடர்ச்சி. எண்ணும், எழுத்தும் தான் தமிழ் மரபின் முதன்மையான கன்னிகள். அதை துவங்கும் குழந்தைகள், வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும். - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.பெற்றோர் பேட்டிஎன் மாமனார் 'தினமலர்' வாசகர். அவர் தான் இந்த நிகழ்ச்சி குறித்து கூறினார். இதையடுத்து முன்பதிவு செய்து பங்கேற்றோம். ‛அ'னா, ‛ஆ' வன்னா எழுதுவது தான் கல்வியின் ஆரம்பம்; வாழ்க்கையின் முதல் படி. - எஸ்.பிரபாவதி, 30, திம்மாவரம், செங்கல்பட்டு.மழலையரின் நல்ல ஆரம்பம், இந்த ‛அ'னா, ‛ஆ' வன்னா அரிச்சுவடி நிகழ்ச்சி. இதில் பங்கேற்றது மகிழ்ச்சி. - கே. கீதாலட்சுமி, 29. புரசைவாக்கம்.பல்துறைகளில் சாதனை பல புரிந்த பிரபலங்கள், குழந்தைகளின் விரலை பிடித்து, நெல் மணியில் 'அ'னா, ‛ஆ'வன்னா எழுதியது மனதிற்கு பெரும் உற்சாகத்தை தந்தது. - ஆர். மணிபாரதி, 23, மறைமலை நகர்.என் மகள், வேலம்மாள் பள்ளியில் படிக்கிறார். அப்பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி கூறினர். என் மகன் அழாமல் ஆர்வமாக, நெல்லில் 'ஆ' னா, 'ஆ' வன்னா எழுதியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. - எஸ். பிரியா, 39. மண்ணிவாக்கம்.எனது பேத்தி ரின்சா மரியம், 3. இவருக்காக வந்தோம். தினமலர் நிர்வாகம் தங்கள் குழந்தையை போன்று, பல குழந்தைகளுக்கும் கல்விக்கான ஆரம்பத்தை வழங்கி உள்ளது. குழந்தைகள் பள்ளி செல்வதற்கான, அற்புதமான சூழல் இந்த அரிச்சுவடி நிகழ்ச்சியால் கிடைத்துள்ளது. - மரியம், 54; கதிர்வேடு, புழல்.எங்கள் குழந்தைகளுக்கு, முதல் முறையாக கிடைத்திருக்கும் இந்த நல்ல அனுபவத்திற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி. - குறளரசன், விஷ்ணு பிரியா, 30; முகப்பேர்.பள்ளிக்கு செல்ல துவங்கும் குழந்தைகளின் உற்சாகத்திற்கான வாய்ப்பு தான், இந்த அரிச்சுவடி நிகழ்ச்சி. அவர்களுக்கும், எங்களுக்கும் புது அனுபவமாகவும் நல்ல ஆரம்பமாகவும் இருந்தது. - யுவராஜ், 36; புழல்.