நாமக்கல்லில் பள்ளி மேலாண் குழுவினருக்கு பயிற்சி முகாம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண் குழு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். அப்போது, பயிற்சியின் கருத்துருக்கள், 100 சதவீதம் பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்.பள்ளி அளவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சார்ந்த விபரங்களை, பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினார்.தொடர்ந்து நடந்த முகாமில், பள்ளி மேலாண் குழு துணைக் குழுக்கள் பற்றியும், பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள் மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம், பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்தல் குறித்து விளக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள, 15 வட்டார வள மையங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர். கருத்தாளர்களாக, 13 ஆசிரியர் பயிற்றுனர்கள் செயல்பட்டனர்.