பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி
கோவை: ஓட்டளிப்பது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேர்தல் தொடர்பான வினாடி - வினா போட்டி, கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 600 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் சுற்றில் பங்கேற்ற, 300 அணிகளில் இருந்து, ஜி.டி., மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மூன்று அணிகள், சுகுணா பிப் பள்ளி, ஜி.கே.டி., மெட்ரிக் பள்ளி, அனன் இன்டர்நேஷனல் பள்ளிகளில் இருந்து, தலா ஒரு அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இறுதிச்சுற்றில் ஜி.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாமிடத்தை பெற்றனர். ஜி.கே.டி., பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். இவர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான, 2024, ஜன., 25ம் தேதியன்று பரிசு வழங்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.