வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் அமைச்சர் தியாகராஜன் பேச்சு
மதுரை: சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும் என, அமைச்சர் தியாகராஜன் வலியுறுத்தினார்.மதுரை மடீட்சியாவில் தொழில் முதலீட்டு கழகம் (டிக்) சார்பில் நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:தமிழகம் 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தாலும் அனைத்து மாவட்டங்கள் பங்களிப்பும் அவசியம்.நம் நாட்டில் அதிக மனிதவளம் உள்ளது. நாடு வளர்ச்சியடைய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஏற்ப சிறுகுறு நடுத்தர தொழில்கள் மூலமும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.அந்த வகையில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்புகளை சிறுகுறு தொழில்கள் மூலம் உருவாக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அரசும் பல திட்டங்களை வங்கிகள் உள்ளிட்டவை மூலம் செய்கிறது. சமமான வளர்ச்சிக்கு சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.தற்போது சிறுகுறு நிறுவனங்களில்தான் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சூழல் உள்ளது. தொழில் முனைவோருக்கான முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டல தலைவி சரவணபுவனேஸ்வரி, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் கணேசன், மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன் பங்கேற்றனர்.