சவால்கள் இருக்கும் இடங்களில் தொழில் வாய்ப்புகளும் உள்ளன
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 43வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலை அரங்கில் நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.டில்லி வேளாண் உழவர் நலத்துறையின் செயலர் மனோஜ் அகுஜா பேசியதாவது:வேளாண் துறைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ரூ.25 ஆயிரம் கோடி என்றிருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, ஆற்றல் தேவை போன்ற பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதுபோன்ற பிரச்னைகள், சவால்கள் உள்ள அனைத்து இடங்களிலும் வாய்ப்புகள் அதிகம்.மாணவர்கள், இளைஞர்கள் அத்தகைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில், 6.50 லட்சம் கிராமங்கள் உள்ளன; வேளாண் படிப்பு முடித்து வரும் மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி, விவசாயிகளின் பிரச்னைகள், சவால்களை நேரடியாக புரிந்து கொள்ள வேண்டும்.எரிபொருள் தேவையை சமாளிக்கும் வகையில், எத்தனால் பயன்பாட்டை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எத்தனால், கரும்பு, சோளம் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது; இதுபோன்ற துறைகளை மையமாக கொண்டும், விவசாயிகள் உற்பத்தியை மேற்கொள்ளலாம். கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.இப்பட்டமளிப்பு விழாவில், 3720 பேர் பட்டங்களை பெற்றனர். கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவி சாய்லா அஞ்சும் தங்கபதக்கமும், 58 பேருக்கு வெள்ளி முலாம் பூசப்பட்ட பதக்கமும், பல்கலை தரப்பில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.