அரங்கநாதன் இலக்கிய விருது இரண்டு பேருக்கு அறிவிப்பு
சென்னை: முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில், தெ.ஞானசுந்தரம், கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.தமிழில் கவிதை, சிறுகதை, நாவல், கலைகள் என அனைத்து படைப்பு தளங்களிலும், கூரிய பார்வையும், நேரிய சிந்தையும் கொண்டு எழுதியவர் மா.அரங்கநாதன். அவரின் நினைவாக, தமிழ் இலக்கிய துறையில் பங்களிப்போருக்கு, மா.அரங்கநாதன் இலக்கிய விருது' 2018 முதல் ஏப்., 16ல், முன்றில் இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படுகிறது.மயிலாடுதுறை மாவட்டம், குழையூரில் பிறந்தவர் தெ.ஞானசுந்தரம். வைணவ உரை வளம் குறித்து ஆய்வுகளை செய்து, முனைவர் பட்டம் பெற்ற இவர், பல கல்லுாரிகளில் முதல்வராக பணியாற்றியதுடன், தமிழ் பல்கலையின் அரிய கையெழுத்து சுவடி பிரிவிலும் பணியாற்றியவர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வெ.பாலசுப்பிரமணியன். இவர் கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் துறைகளில் பல சாதனைகள் படைத்தவர். பல நுால்களின் ஆசிரியரும் கூட.இவர்கள் இருவருக்கும் இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, வரும் 16ம் தேதி, சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை வழங்க உள்ளார்.