தேர்வுகள் நிறைவு பெற்றதால் பள்ளிகளில் கோடை விடுமுறை
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், நேற்று தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 4 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10,12ல் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள், 22, 23க்கு ஒத்தி வைக்கப்பட்டது. 13ல் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தேர்வுக்காக மாணவ,மாணவிகள் 22,23ல் பள்ளிக்கு வந்து சென்றனர். ஏற்கனவே 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தனியார் பள்ளிகளிலும் ஏற்கனவே ஆண்டு இறுதி தேர்வு முடிந்து மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் வரும், 26 வரை பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்கும். சுட்டெரிக்கும் வெயிலில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் கடந்த இரு நாட்களாக கவலையுடன் அனுப்பி வைத்தனர். தேர்வு முடிந்ததால் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.