தமிழகத்தில் வழக்குகளால் தான் தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன
சென்னை: தமிழகத்தில் வழக்குகளாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும் தான், தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசினார்.மத்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வஞ்சியூர் பன்னீர்செல்வம் எழுதிய மிழ் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப் பிரிவுகள் வரலாறு - கி.மு., 300 முதல் 1600 வரை என்ற நுால் நேற்று வெளியிடப்பட்டது. நுாலை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் வெளியிட, தமிழ் ஹெரிட்டேஜ் சென்டர் சிவசங்கர்பாபு, தமிழக தொல்லியல் அறிஞர் ராஜன், தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் பெற்றுக் கொண்டனர்.ஓய்வு நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழில் உள்ள நிலையில் சமஸ்கிருதம் படித்தால் தான், தொல்லியல் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆதிச்சநல்லுார் அகழாய்வு அறிக்கைக்காக 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கீழடி அகழாய்வுக்காகவும், மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு படிகளை கொண்டு வரவும் போராட வேண்டி இருந்தது.மத்திய தொல்லியல் துறை திருச்சி கிளைக்கும், நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டி இருந்தது. நாம் எந்த மொழியையும் வெறுக்காத போது நம் மொழி மீது வெறுப்புடன் பலர் உள்ளதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.