அதிவேக வாகனங்களால் அச்சம்; பள்ளி மாணவர்கள் திணறல்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள், ஆபத்தை உணராமல் யு டர்ன் பகுதியில் இருந்து ஒன் வே வழியாகவே வருகின்றனர்.அரசு பஸ்சில் வரும் மாணவர்கள் பள்ளி எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ரோட்டை கடந்து செல்கின்றனர். அதிக வேகமாக வாகனங்கள் வரும் போது, மாணவர்கள் வேகமாக ஓடுகின்றனர். மேலும், இங்கு உள்ள சென்டர் மீடியனை கடந்து செல்ல இப்பகுதியில் மட்டும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.பெற்றோர்களும், மாணவர்களும் ஆபத்தை உணராமல் தினம் தோறும் இப்படி சென்று வருகின்றனர். பள்ளி அருகே ரோடு தாழ்வாக உள்ளதால் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.எனவே, பள்ளி மாணவர்கள் நலன் கருதி, பள்ளி நேரத்தில், பாதுகாவலர்களை நியமித்து, மாணவர்கள் ரோட்டை கடக்க உதவ வேண்டும். வாகனங்கள் மெதுவாக வரும் வகையில், எச்சரிக்கை சிக்னல் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.