உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சென்னை: பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்' என, சமூக பணியில் அரசு ஊழியர் சங்கத் தலைவரான, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:பழங்குடியினர் நலத்துறையில், 210 இடைநிலை ஆசிரியர்; 179 பட்டதாரி ஆசிரியர்; 49 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. தற்காலிக தொகுப்பூதிய பணி நிரவல் வழியே சமாளிக்கப்பட்டு வந்தன.நடப்பு கல்வியாண்டு துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைந்த நிலையில், காலியிடங்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல பள்ளிகள் ஆசிரியர் இல்லாத பள்ளிகளாகவும், பெரும்பாலான பள்ளிகள் ஓராசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகளாகவும் உள்ளன.அங்கு படிக்கும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகி உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, பள்ளிகளை நடத்த வேண்டும்.இதே கோரிக்கையை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவேக், சுதாகர், சங்கரசபாபதி ஆகியோர், ஊடகங்கள் வழியே வலியுறுத்தியதாக, அவர்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.கோரிக்கையை நிறைவேற்றாமல், கோரிக்கை வைப்பதே குற்றம் எனக்கூறி, சங்க நிர்வாகிகள் மீது பெரும் தண்டனைக்குரிய குற்ற குறிப்பாணை வழங்குவது கண்டனத்திற்கு உரியது. கோரிக்கை கொடுத்தவர்களின் குரல் வளையை நெரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது, ஜனநாயக விரோத செயல்.இந்திய அரசியலமைப்பு சட்டம், 19வது பிரிவின்படி, அரசு ஊழியர்கள் சங்கங்கள் வைத்துக் கொள்ளவும், தங்கள் கோரிக்கைகளை, குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தவும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் உரிமை உள்ளது.எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அவர்கள் மீதான குற்ற குறிப்பாணைகளை, உடனே ரத்து செய்ய வேண்டும். பழங்குடியினர் நலத்துறைக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் ஒருவரை இயக்குனராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்