பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில், 20,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. துணை மருத்துவப் படிப்புகளுக்கு 68,108 பேரும், ஆறு ஆண்டு கால பார்ம்., டி படிப்புக்கு 3,540 பேரும் விண்ணப்பித்தனர்.இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், துணை மருத்துவப் படிப்புக்கு 67,038 பேரும்; பார்ம்., டி படிப்புக்கு 3,486 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.துணை மருத்துவப் படிப்பில், வினோதினி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்ணுடன் முதலிடம்; 199.50 மதிப்பெண்ணுடன் முஸ்பின் இரண்டாமிடம்; 199 மதிப்பெண்ணுடன் ஷிவானி மூன்றாமிடம் பெற்றனர். பார்ம்., டி படிப்பில், திவ்யா முழு கட் ஆப் மதிபெண்ணுடன் முதலிடம்; அபிநயா, யாழினி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கு பின், துணை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் துவங்கும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.