பட்டமளிப்பு விழாவில் அங்கி மாற்றி அமைப்பதில் தவறில்லை
கோவை: பட்டமளிப்பின் போது அணியும் கருப்பு அங்கி, தொப்பிக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கலாசார உடையை, அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில், இனி கருப்பு நிற அங்கி, தொப்பி அணிவதற்கு பதிலாக, நம் நாட்டின் பாரம்பரிய உடைகளை அணியலாம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.இது குறித்து, கோவை கல்லுாரி முதல்வர்கள் என்ன சொல்கிறார்கள்?மனோன்மணி, முதல்வர் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி: பட்டம் பெறும் போது அங்கி, தொப்பி அணிவது தேவையானது தான். அனைத்து தரப்பு மாணவர்களும் சமம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதை தொடரலாம்.ராஜேஸ்வரி, முதல்வர், சி.ஐ.டி., கல்லுாரி: மாற்றம் அவசியம் வேண்டும். இன்றைய தலைமுறைக்கு நம் கலாசாரம், பண்பாடு, ஆகியவற்றை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். அவர்களுக்கும் அது நன்றாக இருக்கும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவது நல்லது.மணியரசன், முதல்வர், நேரு இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி: பட்டம் பெறுவோர் அணிய வேண்டிய உடை குறித்த வரைமுறை இருக்க வேண்டும். பட்டம் பெறுவது, ஒரு தனித்துவமான விஷயம்; பெருமை. பெற்றோருக்கும் அது ஒரு பெருமைக்குரிய விஷயம். நாடு முழுவதும், ஒரே மாதிரியான கலாசார உடையை அரசு வகுத்தால் நன்றாக இருக்கும்.வேல்ராஜ், துணைவேந்தர், கோவை மண்டல அண்ணா பல்கலை: அந்தந்த பல்கலைகளுக்கு ஏற்றார் போல், ஒரு உடையை நிர்ணயம் செய்வது சிறப்பாக இருக்கும். மாற்றம் வருவது நல்ல விஷயம் தான். தமிழக அரசும் செயல்படுத்தலாம்.வீரமணி, முதல்வர், புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரி: பட்டம் பெறுவது ஒவ்வொருவருக்கும் பெருமைக்குரிய விஷயம். அதில், மாணவர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும். இது, புதிதாக வரும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். படிக்கும் எண்ணத்தை துாண்டும். இந்த அங்கியும், தொப்பியும் அணிய வேண்டியது அவசியமே.