டிப்ளமா இன்ஜினியரை வாழ வைக்கும் குடை மிளகாய்
பாகல்கோட்: ஒரு காலத்தில் பரம்பரை தொழிலாக விவசாயம் செய்தவர்கள் மட்டுமே தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போது பல தரப்பினவரும் விவசாயத்தில் ஈடுபட துவங்கி உள்ளனர்.வேலையில்லா இளைஞர்கள் விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால், பெரிய நிறுவனங்களில் நல்ல வேலைகளில் இருப்போர்கூட, தங்களது வேலையை துறந்து, விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.இவர்களை போல டிப்ளமோ இன்ஜினியர் ஒருவரும் விவசாயத்தில் ஈடுபட்டு, குடை மிளகாய் விளைச்சலில் அசத்தி வருகிறார். பாகல்கோட்டின் ரபகவிபனஹட்டி அருகே யல்லட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோலகி, 35. சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட இவருக்கு ஆசை இருந்தது.ஆனால் டிப்ளமோ இன்ஜினியர் படித்துவிட்டு, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனாலும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தால், 2019ல் வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்.தந்தையிடம் இருக்கும் 18 ஏக்கர் நிலத்தில் இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கினார். தனது நண்பரும், காய்கறி விற்பனையாளருமான ராஜா ஸ்ரீநாத்திடம், எந்த வகை காய்கறிகள் பயிரிட்டால் விவசாயத்தில் வெற்றி பெறலாம் என்று ஐடியா கேட்டார். அவர், குடைமிளகாய்க்கு நல்ல மவுசு உள்ளது. குடைமிளகாய் பயிரிட்டு வளருங்கள் என, ஆலோசனை கொடுத்தார். பின், மஹாராஷ்டிரா சென்று குடைமிளகாய் விதைகளை வாங்கி வந்து, இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டார். பயிரிட்ட 45 நாட்களில் குடைமிளகாய் நன்கு வளர்ந்தது. அதை விற்று லாபம் ஈட்ட ஆரம்பித்தார்.இதுகுறித்து பிரகாஷ் கோலகி கூறியதாவது:ரபகவிபனஹட்டி, ஜமகண்டி, பெலகாவி, மும்பைக்கு எனது தோட்டத்தில் வளர்ந்த, குடைமிளகாயை விற்பனைக்கு அனுப்புகிறேன்.சந்தைகளில் குடைமிளகாய்க்கு நல்ல டிமாண்ட் உள்ளது. நமது ஊர் சந்தைகளில் ஒரு கிலோ குடைமிளகாயை 15 முதல் 20 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். மும்பையில் 25 முதல் 30 ரூபாய் வரை வாங்குகின்றனர்.என்னிடம் ஏழை குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் வேலை செய்கின்றனர். என்னையும், 8 குடும்பங்களையும் வாழ வைக்கும் விவசாயத்திற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.வணிக பயிர்களை வளர்க்க உழைப்பை அதிகம் போட வேண்டும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும். வரும் நாட்களில் இன்னும் நிறைய காய்கறிகளை பயிரிட திட்டம் வைத்து இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.