இன்ஜி., கவுன்சிலிங்கில் கொங்கு மண்டல கல்லுாரிகள் டாப்
கோவை: தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், 83.35 சதவீத இடங்கள் நிரம்பி, கொங்கு மண்டலம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 440க்கு மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளன.இந்நிலையில், கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளை, மாணவர்கள் அதிகளவு தேர்வு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:கொங்கு மண்டல கல்லுாரிகளில் உள்ள, 59 ஆயிரத்து, 679 இடங்களில், 50 ஆயிரத்து, 039 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மொத்த இடங்களில், 83.35 சதவீத இடங்கள் நிறைவடைந்துள்ளன.குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கோவை, சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக்கல்லுாரி, பி.எஸ்.ஜி., ஐ.டெக்., கோவை, ஜி.சி.டி., வி.எஸ்.பி., குழுமத்தை சேர்ந்த கரூர் வி.எஸ்.பி., இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை வி.எஸ்.பி., இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.தென் மண்டல மாவட்டங்கள் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி ஆகிய பகுதிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. தென்மண்டலத்தில் உள்ள, 37 ஆயிரத்து, 745 இடங்களில், 21 ஆயிரத்து, 981 இடங்கள் நிரம்பியுள்ளன. இது, 58.24 சதவீதம்.இதற்கான காரணம் குறித்து, ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது:சென்னையை போல், கொங்கு மண்டலத்தில், உள்ள கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் ஆகியவற்றின் காரணமாக, மாணவர்கள் அங்குள்ள கல்லுாரிகளை, அதிகம் விரும்புகின்றனர்.கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் மாணவர்களுக்கு தொழில்நுட்பம், தொழிற்சாலையில் பயிற்சி அதிகம் கிடைக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை.மாணவர்கள் தங்களது திறன்களை, எளிதில் வெளிப் படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. அதேபோல், வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள சென்னை, கொங்குமண்டல கல்லுாரிகள் அதிக வாய்ப்பு அளிக்கின்றன.பஸ் வசதிசென்னையில், நகரத்தில் இருந்து கல்லுாரிகள் அதிக தொலைவில் உள்ளன. ஆனால், கோவை போன்ற நகரங்களில் முக்கியமான கல்லுாரிகள் பல, நகரத்துக்குள் இருப்பது மாணவர்களுக்கு வசதியான ஒன்றாக உள்ளது.சற்று தொலைவில் இருந்தாலும், சில கல்லுாரிகள், 60 - 70 கி.மீ., வரை பஸ்களை இயக்குகின்றன. இதனால், துாரம் என்பது மாணவர்களுக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. தென்மண்டலத்தில் சேர்க்கை குறைவு என்றாலும், 50 சதவீதத்துக்கு மேலான இடங்கள் பூர்த்தியாகி உள்ளன. கல்லூரிகள் உட்கட்டமைப்பு, வசதிகளை பெருக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.