உள்ளூர் செய்திகள்

நீதிபதிகள் சட்டக் கல்லூரிகளை ஆய்வு செய்யலாம்; ரகுபதி

புதுக்கோட்டை: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்குச் சென்று, நீதிபதிகள் ஆய்வு செய்யலாம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:எல்லோருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, மதச்சார்பின்மை குறித்து மனம் போன போக்கில் பேசியுள்ளார். அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அவருடைய பேச்சு கண்டிக்கத்தக்கது. வேறு எந்த கவர்னரும் இப்படியெல்லாம் பேச மாட்டர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புகிறோம்.தமிழகத்தின் சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும் தான் சட்டக் கல்லூரிகள் சரியான அடிப்படை வசதிகளோடு இயங்குகின்றன. தேவையானால், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்குச் சென்று, நீதிபதிகள் ஆய்வு நடத்தட்டும்.தனியார் சட்டக் கல்லூரிகளை விட பன்மடங்கு கூடுதலாகவே, அடிப்படை வசதிகள் அரசு சட்டக் கல்லூரிகளில் செய்யப்பட்டு உள்ளன.முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால், ஏன் வழக்கு போடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். போடவில்லை என்றால், ஏன் போடவில்லை என்று கேட்கின்றனர். எதையும் எடுத்தோம்; கவிழ்த்தோம் என செய்ய முடியாது. புகார் வந்ததும் விசாரிக்கப்படுகிறது. விசாரணை முழுமையாக முடிவடைந்து குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியும்பட்சத்தில் தான், போலீஸ் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதை தமிழக போலீஸ் சிறப்பாக செய்கிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்