ஆட்டோமொபைல் தொழிலாளர்களில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கணேசன்
சென்னை: தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே, விபத்து இல்லாத நிலையை அடைய முடியும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில், உயரமான இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்தது.கூட்டத்தில், உயரமான இடங்களில் பணிபுரிவதற்கான பாதுகாப்பு குறித்த கையேடு வழங்கி, அமைச்சர் கணேசன் பேசியதாவது:தொழிலாளர்களின் பாதுகாப்பில், முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், 1,844 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.இதில், 98,245 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2022 - 23ல், நாட்டில் 18.49 லட்சம் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் உள்ளனர்.இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதில், 15 சதவீத தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். நாட்டின் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.தொழிற்சாலைகளில், ஒவ்வொரு பணிக்கும் உரிய திறன் உடைய, பாதுகாப்பு விழிப்புணர்வு உடைய தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும்.தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே, விபத்தில்லாத நிலையை அடைய முடியும். தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிய, தங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு விபரங்களை, சக தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொழிலாளர் நலத்துறை செயலர் வீரராகவ ராவ் பேசுகையில், தொழிலாளர்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளை திறம்பட கையாள்வதன் வாயிலாகவும், பயிற்சி வகுப்புகளை நடத்துவதன் வாயிலாகவும், தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது, என்றார்.கூட்டத்தில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஆனந்த், கூடுதல் இயக்குனர்கள் செந்தில்குமார், பிரேமகுமாரி, இணை இயக்குனர்கள் இளங்கோவன், ஜெயகுமார், சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.