பாரதியார் பல்கலை., வளாகத்தில் தீ விபத்து
வடவள்ளி: பாரதியார் பல்கலை., வளாகத்தில் உள்ள தைலக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு இருந்த புற்கள் எரிந்து சாம்பலானது.கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., அமைந்துள்ளது. நேற்று மாலை, அண்ணா பல்கலை., வளாகத்திற்குட்பட்ட எல்லையில் உள்ள காய்ந்த புற்களில், திடீரென தீப்பிடித்தது.சிறிது நேரத்திலேயே தீ மளமளவென பரவி, பாரதியார் பல்கலை., வளாகத்தில் உள்ள தைலக்காட்டில் பரவியது. தைலக்காட்டில் உள்ள காய்ந்த புற்களில் தீ பரவி, கொளுந்து விட்டு எரிந்தது.தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சுமார், 1 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள் எரிந்து சாம்பலானது.