எந்த மொழியையும் திணிக்க கூடாது: சாமிநாதன்
சென்னை : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சிறப்பாக தமிழ் பணி செய்து வரும், 38 பேருக்கு, 2023ம் ஆண்டுக்கான, 'தமிழ் செம்மல்' விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. விருது மற்றும், 25,000 ரூபாய் காசோலையை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு வாயிலாக, தமிழுக்கு ஆற்றிய பணி, படைப்புகளை அடிப்படையாக வைத்து, விருதாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இன்றைய சூழலில், ஹிந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மூன்றாவது மொழி கற்றுக் கொள்வது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த மொழியை தான் கற்க வேண்டும் என, திணிப்பது ஏற்புடையதுஅல்ல.இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.என் கல்லுாரி படிப்புக்கு பின், ஹிந்தி திணிப்புக்கு எதிராக, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எரித்து, 45 நாட்கள் கோவை சிறைக்கு சென்றவன் என்ற முறையில் சொல்கிறேன்; ஹிந்தி திணிப்பை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். தமிழ் மொழி நமது உயிர் மூச்சு என்பதை உணர்ந்து, அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.