உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடியில் புதிய பி.டெக். பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை: சென்னை ஐஐடி-ல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் புதிய பி.டெக். பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாத்வானி தரவி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி மூலம் வழங்கப்படும் இந்த இளங்கலைப் படிப்பில், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து சுகாதாரத்துறை வரை பல்வேறு துறைகளுக்குத் தேவையான தொழில்முனைவர்கள் உருவாக்கப்படுவார்கள்.2025-26 கல்வியாண்டில் இரண்டாவது தொகுதி மாணவர்கள் சேர்க்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்திற்கு, ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் ஜேஓஎஸ்ஏஏ கவுன்சிலிங்கில் விண்ணப்பிக்கலாம். ஆண்டு ஒன்றுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த பாடத்திட்டம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியலின் அடிப்படைகள், கணினிப் பார்வை, இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு விரிவான அறிவையும் திறமைகளையும் வழங்கும்.சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், செயற்கை நுண்ணறிவும் தரவுப் பகுப்பாய்வும் வளர்ச்சியடையும் துறைகள். தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் சமூக தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும் என்றார்.வாத்வானி பள்ளித் தலைவர் பேராசிரியர் ரவீந்திரன் கூறுகையில், ஏஐ என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம். இதன் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சி செய்யும் அளவுக்குத் தேவையான அடிப்படை அறிவைப் பெற முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவின் பொறுப்புணர்வான பயன்பாடுகளை உணர்வதற்கும் இது வழிவகுக்கும், என தெரிவித்தார்.மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களை ஊக்குவிக்கும் வகையில், துறைக்குள் மற்றும் துறைக்கு வெளியேயான விருப்பப்பாடங்கள், நடைமுறை சார்ந்த பயிற்சிகள், தொழில்துறையுடன் இணைந்த வாய்ப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்