ஆண்டார்குப்பம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க கோரிக்கை
சித்தாமூர் : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டசபை தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், ஆண்டார்குப்பம் உயர்நிலைப் பள்ளி, 1963ம் ஆண்டு துவக்கப்பட்டது.இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, 2011ல், பெற்றோர் - ஆசிரியர் கழகம் வாயிலாக, இரண்டு லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தப்பட்டு, அதற்கான 18 பக்க ஆவணங்களும் கல்வித் துறை வசம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.தற்போது, இப்பள்ளியில் 10ம் வகுப்பில், 70 மாணவர்கள் உட்பட, மொத்தம் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஆண்டார்குப்பம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 1 பயில்வதற்காக, அச்சிறுபாக்கம், கடப்பாக்கம், மதுராந்தகம் செல்ல வேண்டி உள்ளது.இதனால், மாணவர்களின் நேரம் வீணாகிறது. தவிர, அலைச்சலால் உடல் சோர்வும் ஏற்படுகிறது.எனவே, ஆண்டார்குப்பம் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.