போலீஸ் வினாத்தாள் கசிவு தலைமறைவு நபர் சிக்கினார்
முசாபர்நகர்: உ.பி.,யில், போலீஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வின் வினாத்தாளை கசிய விட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு பிப்ரவரி 17, 18ம் தேதிகளில், உத்தர பிரதேச போலீஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற இருந்தது. முதல் நாளில், அந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது. இது தொடர்பாக, ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.கடந்த ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி அந்த தேர்வை ரத்து செய்த உ.பி., அரசு, ஆறு மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. வினாத்தாளை கசிய விட்டதாக, அஜய் என்பவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் தேடி வந்தனர்.அவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை, நேற்று முன்தினம் முசாபர்நகரில் போலீசார் கைது செய்தனர்.கைதான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.